Pages

Thursday, September 5, 2013

ஒரு ஆசிரியரின் கதை... "ராணி மிஸ்" Message from சற்றுமுன் செய்திகள் rani miss teacher story

சற்றுமுன் செய்திகள்:
ஒரு ஆசிரியரின் கதை...
"ராணி மிஸ்"... "ராணி மிஸ்".. "ராணி மிஸ்"..

25 ஆண்டுகள் ரோட்டரி பள்ளியை ஆட்கொண்ட இந்த பெயர்.. பல நூறு நெஞ்சங்கள் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் முறை அழைத்த பெயர்.. இப்போது வீட்டில் ஓய்வெடுத்து பூனைக்குட்டிகளையும் சிட்டு குருவிகளையும் கொஞ்சி வருகிறது.. ஊரெங்கும் ஓடித்தேய்ந்த ஆரூர் ஆழித்தேர் நிலைநின்று மூச்சு வாங்குகிறது..

கொஞ்சம் நரைத்து, நடை தளர்ந்து அக்கம்பக்கத்து வீடுகளுடன் வாழ்க்கை பரபரப்பில் விடுபட்ட கதைகளை தூசு தட்டி சில வருடங்களாக வீட்டுக்குடித்தனமாக போராடுகிறார் ராணி மிஸ்..  ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் நானும் படித்ததால் என் மனத்திலும் அம்மா என்பதைவிடவும் "ராணி மிஸ்" என்றே அதிகம் பதிந்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் (கணிதம் தவிர) அனைத்து பாடங்களிலும் மேதமை.. நடனம், பாட்டு எழுதுவது, பாடுவது, ஆடல், ஒப்பனை, விளையாட்டு, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, சமூக சேவை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகி என் அம்மா..

தன்னிடம் படிக்கும் பிள்ளைக்களை புத்தக புழுக்கலாக மாற்றாமல் அவர்களின் ஆவலை தூண்டி படிக்க வைப்பார்.. படிப்பை வேப்பங்காயாக பார்க்கும் பிள்ளைகள் மாலை வீடு வந்து புத்தகங்களை தேடி படிக்கும் அதிசயத்தை செய்தவர். அதிக மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளுக்கு (நானும் அதில் உண்டு) தேவை இல்லாத பல சலுகைகளை அள்ளித்தரும் ஆசிரியர் மத்தியில் எல்லோரையும் சமமாக நடத்துவார்.

பிற துறைகளில் ஆர்வம் உள்ள பிள்ளைகளையும் ஆதரிப்பார். "மிஸ் நீங்க சொன்னது தப்பு" என்ற பிள்ளையிடம் மறுநாள் சரிபார்த்து மறக்காமல் வகுப்பறையிலேயே "ஆமாம் பா.. நான் தான் தப்பா சொல்லிட்டேன்.. நீ சமர்த்து" என்று பாராட்டிய வேறு ஆசிரியையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.. பாடத்துடன் நல்ல புத்திமதிகளையும் சொல்லிக்கொடுப்பார்..

ஏரோப்ளேன் பறந்தால் கூட பிள்ளைகளை "ஓடிப்போய் பாருங்க" என்று விரட்டி விடுவார்.. ஆங்கில பாடத்தை கூட வாயை பிளந்து கதை கேட்கும்படி நடத்துவார்.

பிரெஞ்சு புரட்சியை அடிப்படையாக கொண்ட Scarlet Pimpernel என்ற பத்தாம் வகுப்பு துணைப்பாடத்தை அம்மா எங்கள் வீட்டில் நடத்த பரபரப்பாய் நான் கேட்ட மாலை நேரங்கள் இன்னும் நினைவில் உண்டு.. அப்போது என் அம்மா என் வகுப்பு ஆசிரியரே அல்ல.. மறுநாள் சென்று அந்த தூங்கு மூஞ்சி வாத்தியார் நடத்துவதை கேட்டால் அது வேறு கதையோ என்றே எண்ண தோன்றும்.. வகைதொகை இல்லாமல் வரலாறும், இலக்கியமும் படித்து அதை பிள்ளைகளுக்கு சிரிக்க சிரிக்க சொல்லிகொடுப்பார்...

விளையாடும் போது மண்டை உடைந்த பிள்ளைகளுக்கு டின்ச்சர் தடவி கட்டுகட்டி மருத்துவமனைக்கு தூக்கி போவதில் இருந்து.. ஏழை பிள்ளைகளுக்கு பிற பணக்கார பணக்கார பெற்றோரிடம் கெஞ்சி கூத்தாடி சீருடை, பள்ளி கட்டணம் வாங்கித்தருவது வரை.. பள்ளிக்கு கட்டிடம் கட்ட பெற்றோரிடம் நன்கொடை பிரச்சாரம் முதல்.. பிள்ளைகளுடன் வாய்க்காலில் கவிழ்ந்து கிராமத்தாரால் சிறை பிடிக்கப்பட்ட பள்ளி வேனை பஞ்சாயத்து பேசி மீட்பது முதல்.. ஒரு நிஜமான ஆள் ரவுண்டர் ராணி மிஸ்..

நடையில் ஒரு மிடுக்கு.. பேச்சில் ஒரு துள்ளல்.. எழுத்தில் ஒரு மின்சாரம்.. கருத்துகளில் ஒரு தெளிவு.. பேச்சுகளில் ஒரு ஜனரஞ்சகம்.. திறமைகளின் மொத்த உருவம் என் அம்மா..

சோறு போடும் பள்ளிக்கு மாணவர் சேர்க்கை முதல், நிதி சேர்க்கை வரை பாடுபடுவதும் இவரே.. சம்பளம் தரும் முதலாளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சக ஊழியர்களை காப்பதும் இவரே.. முதலாளிகளின் சிம்ம சொப்பனம்.. அறிவிக்கப்படாத தொழிற்சங்கத்தின் எதிர்க்கப்படாத தலைவி, ராணி மிஸ்..

பணி ஒய்வு விழாவில் என் அம்மாவின் புகழ்பாடி ஆசிரியர்களும், பள்ளியின் முதலாளியும் சின்ன பிள்ளைகள் போல தேம்பி தேம்பி அழுத நிமிடங்கள் சொல்லும் "ராணி மிஸ்" புகழை..

இன்றளவும் நடுவீதியில் ஓடிவந்து "மிஸ்.. ஞாபகம் இருக்கா.. நான் உங்ககிட்ட 87 ல 3rd standard படிச்சேன்" என்று அறிமுகமாகும் நபர்கள் பலர் ஏற்கனவே இன்று அம்மாவை வாழ்த்திவிட்டார்கள்.. அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.. இந்த நாள் வர காரணமான ராதாகிருஷ்ணன் இவ்வளவு செஞ்சாரான்னு நான் பார்த்ததில்லை.. என்னை கவர்ந்த வகுப்பு ஆசான், வாழ்க்கை ஆசான் என் அம்மா தான்..

"ராணி மிஸ்.. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.."

(Sent via Seesmic http://www.hootsuite.com)

No comments:

Post a Comment