ராஜா ராணிக்கு தமிழகத்தில் இப்படி விமர்சனம் எழுதியுள்ளனர்…
by admin
TamilSpyYesterday,
ஆர்யாவும் நயன்தாராவும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் இல்லற வாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்தது போல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஒருநாள் நயன்தாராவுக்கு வலிப்பு நோய் வருகிறது. உடனே, அவரை ஆர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பும் நயன்தாராவிடம், எப்படி இதுபோல் ஆனது என ஆர்யா விசாரிக்கிறார். அப்போது, நயன்தாரா தான் ஏற்கெனவே ஜெய்யை காதலித்ததாகவும், அவன் தற்கொலை செய்து கொண்டதையும் ஆர்யாவிடம் சொல்கிறார். இதைக் கேட்கும் ஆர்யா, நயன்தாரா மீது காதல் வயப்படுகிறார். ஆனால், நயன்தாரா ஆர்யாவை வெறுத்தே ஒதுக்குகிறார்.
ஆர்யாவை நயன்தாரா வெறுப்பதைக் கண்டு ஆர்யாவின் நண்பரான சந்தானம் ஒருநாள் நயன்தாராவை சந்தித்து தன் நண்பன் ஏற்கெனவே நஸ்ரியாவை காதலித்ததும், அவன் கண்முன்னேயே நஸ்ரியா விபத்தில் இறந்ததையும் கூறுகிறார். இதைக் கேட்கும் நயன்தாராவுக்கு ஆர்யா மீது மரியாதை ஏற்படுகிறது.
இறுதியில், இருவரும் மனம் மாறி இல்லற வாழ்க்கையில் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
ஆர்யா பிளேபாய் கேரக்டரில் நடித்திருக்கிறார். அது அவருக்கு நன்றாகவே வந்திருக்கிறது. திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.
நயன்தாராவுக்கு படத்தில் அழுதுவடியும் காட்சிகளாக இருந்தாலும், அழகாக இருக்கிறார். ஜெய்யும், இவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிக்கக்கூடியது. இவருடைய தந்தையாக வரும் சத்யராஜூம், இருவரும் நடித்த காட்சிகள் இதுபோன்று அப்பா-மகள் நண்பர்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்க வைத்திருக்கிறது.
ஜெய் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து கைதட்டல் பெறுகிறார். நகைச்சுவைக்கு சந்தானம், சத்யன் என இருவரும் இருக்கிறார்கள். ஆர்யாவுடன் சந்தானம், ஜெய்யுடன் சத்யன் என ஆளுக்கொரு பக்கம் நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
சத்யராஜ் இப்படத்தில் இன்னும் இளமையாக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அதை காட்சிப்படுத்திய விதம் அருமை. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி இப்படத்தை இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய முந்தைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி. திரைக்கதையை ரொம்ப சாதுர்யமாக கையாண்டியிருக்கிறார். இறுதிக் காட்சிகளை இழுத்தடிக்காமல் சுருக்கமாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் 'ராஜா ராணி' மகுடம் சூட்டலாம்.
காலத்தை வென்ற அதிரடி நாயகன் புரூஸ் லீ – ஸ்பெஷல் வீடியோ
Show commentsOpen link
No comments:
Post a Comment