en mudhal short story Thiruppumunai
by sbsudha
New
கல்லூரியிலிருந்து வீட்டை அடைந்த சஞ்சலாவுக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
"வாடீ பொண்ணே, நீ ரொம்ப அதிருஷ்டகார பொண்ணுடீ" என்று முகம் வழித்தார் அவளது பாட்டி
"என்ன பாட்டி?" என்றாள் ஆவலுடன்.
"உனக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குடீ" என்றார்.
"என்னது சம்பந்தம், கல்யாணத்துக்கா பாட்டி, இப்போவேயா, என்ன பாட்டி இது..... நான் இப்போதானே ரெண்டாவது வருஷம் படிக்கிறேன், அதையானும் முடிக்க விடுங்களேன்" என்றாள் மெல்லிய குரலில்.
பெரியோர்களை எதிர்த்து பேசி அவளுக்கு பழக்கமில்லை அப்படி வளர்க்கப்படவும் இல்லை. கொஞ்சம் டிமிட் தான்.
அவளது எந்த தடையையும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
ஸ்ரீதர் வந்தான், பெண் பார்க்கும் படலம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணை பிடித்திருக்க உடனே முகூர்த்தம் வைக்கப் பட்டது.
கல்யாண நாளும் வந்திட ஸ்ரீதர் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
முதல் இரவு, "பாதியில படிப்பை நிறுத்திட்டோம்னு உனக்கு வருத்தம் உண்டா சஞ்சு?" என்று கேட்டான்.
"கொஞ்சம்" என்றாள்
"மேலே படிக்கச் ஆசைபட்டா நீ படிக்கலாம் சஞ்சு, எனக்கு மார்கெடிங் ஜாப், மாசத்துக்கு இருபது நாள் டூர்லேயே போய்டும்.... நீயும் ஆத்துல போர் அடிச்சு போய்தானே இருப்பே, அதுக்கு டிக்ரீயானும் முடிச்சுடலாமே" என்றான் அவள் கன்னங்களை வருடியபடி. அவள் யோசனையாக அவனை பார்த்தாள்.
அடுத்த நாள் அதே விஷயத்தை அவன் வீட்டில் பேச பூகம்பம் வெடித்தது. "என்னடா, முதல்நாளே மந்திரம் ஓதிட்டாளா, கல்யாணம் ஆயிடுத்து.... இனி படிக்கறதாவது.... ஆத்துல இத்தனை காரியம் இருக்கு..." என்று அடக்கினாள் மாமியார்
மாதம் இருபது நாளும் வேலை மேல் பறந்தான்.... மிச்ச நாட்களில் அவளிடம் அன்பாக இருந்தான்.... அந்த சிறு இன்பம் கூட யாருக்கோ பிடிக்காமல் போனது போலும், விமான விபத்தில் கரிகட்டையாக எரிந்து சாம்பலானான்.
துக்கிரி, ராசி இல்லாதவள்.... யமனுக்கு வாரி குடுத்தவள்... பீடை.... என்ற பல சுடு சொற்களும் வாங்கிக்கொண்டு, என்ன நடந்தது என சரியாக புரியாமல் கூட மணம் ஆன மூன்றே மாதங்களில் பொட்டும் பூவும் இழந்தாள் சஞ்சலா.
"உங்காத்து பெண் இங்கே எதுக்கு, உங்காத்துக்கே அழச்சுண்டு போய்டுங்கோ" என்று துரத்தி விட்டனர்.
அங்கே வந்தும் மறைமுகமான பேச்சுகள்.
"நீ ஏம்மா கிளம்பறச்சே எதிர்ல வந்துண்டு....?" என தந்தையே அதட்டினார்
தாள முடியாமல் அடுக்களையோடு அடைந்தாள்.... அன்னைக்கு உதவினாள்... தங்கைகளை பள்ளிக்கு அனுப்பினாள்.... அவளது சிரிப்பும் பேச்சும் குறும்பும் எங்கேயோ ஓடி மறைந்தன....
அவள் கல்லூரியில் அவளது திறமைக்காக வாங்கிய ஷீல்டுகளும் மெடல்களும் இப்போது அவளை பார்த்து சிரித்தன.... இனி தன் வாழ்வு என்ன என்று யோசிக்க கூட திறன் இன்றி இருட்டு மூலையில் அடைந்து கிடந்தாள் சஞ்சலா.... யாரிடமும் எதுவுமே பேசக்கூட முடியாத நிலை....
'டிக்ரீயானும் முடித்திருந்தால் ஏதேனும் வேலைக்கானும் போகலாம், இவ அத கூட முடிக்கலையே' என்றார் மாமா. என்னவோ இவள் தான் கொழுப்பெடுத்து படிப்பை துண்டித்ததுபோல.
அந்த வாரத்தில் அவளை துக்கம் கேட்கவென அவளது கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் விஷ்ணு வீட்டிற்கே வந்திருந்தார்.
"என்ன இது, பொம்மனாட்டியை பார்க்க ஆத்துக்கே வர்றதுன்னு வழக்கம்...?" என உள்ளே முணுமுணுத்தாலும் கையில் காபியுடன் "வாங்கோ உக்காருங்கோ" என்றாள் அன்னை. அவள் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். கசங்கிய மங்கிய காட்டன் புடவை இழுத்து போர்த்திக்கொண்டு அவர் முன் பாழ் நெற்றியும் கலைந்த தலையுமாக வந்து நின்றவளை கண்டு அந்த பேராசிரியரின் உள்ளம் கொதித்து போனது.
சல்வார்களும் ஷிபான் புடவைகளும் நீட்டாக உடுத்தி கண்ணில் அறிவு களையும் அதே சமயம் குறும்பும் கூத்தாட வகுப்புகளில் டான் டான் என பதில் கூறும் சஞ்சலவை தான் அவருக்கு தெரியும்.
"என்னமா இது கோலம்?" என்றார். அவள் தலை குனிந்தாள்.
"இப்படியே இருக்க போறதா உத்தேசமோ?" என்றார் குரல் கேலிபோல தோன்ற ஏறெடுத்து பார்த்துவிட்டு கவிழ்ந்துகொண்டாள்.
"இப்போதைக்கு சமையல் அறையில தஞ்சமாக்கும், அடுத்து என்ன அப்பளம் பண்ணி விற்க போறியா, இல்லை ஊருகாயா.... இன்னும் மொட்டை அடிச்சு முக்காடு போட்டுக்கலையா?" என்றார். குரலில் காரம் ஏறி இருந்தது... அவள் அதிர்ந்து போய் பார்க்க,
"என்ன பார்க்கிறே, நான் சொன்னதுல எதுவும் தப்பு இருக்கா, எந்த லோகத்தில இருகீங்கம்மா நீங்க எல்லாம்..... ஆறே மாசம் முன்னாடி நீ எப்படி இருந்தேன்னு யோசிச்சியா.... இந்த இருபத்திரெண்டாம் நூற்றாண்டில விதவைனா இப்படித்தான் எல்லாரும் இருக்காங்களா..... உன் அறிவு உன் திறமை உன் குறும்பு பேச்செல்லாம் எங்கே போச்சு.... அதோ, அலமாரி நிறைய அடுக்கி வெச்சிருக்கியே கப்பும் மெடலும்... அதெல்லாம் நீதான் வாங்கினேன்னு உனக்கு நினைவானும் இருக்கா சஞ்சலா?" என்றார் அதிகாரமாக.
"அதுக்கு இப்போ என்ன பண்ண முடியும் சார்? எல்லாம் என் தலை எழுத்து என்றாள்.
"பேஷ், ரொம்ப நல்லா இருக்கு உன் பதில்..... இப்படியே இரு, ஒரு நாள் இருட்டோட இருட்டா மடிஞ்சு போய்டலாம்.." என்றார் கண்ணில் வேதனையுடன்.
அவள் கண்ணீர் உகுத்தாள். "வேற என்ன.... நான்...?" என்றாள் விக்கியபடி.
"ஏன், படி.... மேலே படி, நீ ஐ ஏ எஸ் பண்ணனும் னு நான் ஆசைப்பட்டேன் சஞ்சலா..... அதுக்குண்டான எல்லா தகுதியும் உன்கிட்ட இருந்தது.... நீ டிக்ரீ முடித்ததும் உன்னை ஐ ஏ எஸ் சேர்க்க சொல்லி நானே உன் தந்தையிடம் வந்து பேசலாம்னு இருந்தேன்.... திடீர்னு கல்யாணம் னு வந்து நின்னே, எனக்கு வெறுத்து போச்சு..... ஆனா இப்போ நீயா.... இப்படியான்னு எண்ணும்போதே எனக்கு வேதனையா இருக்கு.... ப்ளீஸ் நல்லா யோசிமா, மேலே படிமா, ஐ ஏ எஸ் பண்ணு. நான் உதவி பண்ணறேன் மா" என்றார்.
அவள் ஒரு பக்கம் அதிர்ச்சியும் ஒரு பக்கம் ஆச்சர்யமுமாக அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
"சார், நானா, ஐ ஏ எஸ் ஆ என்ன சொல்றீங்க?" என்றாள்.
"ஏன் உன்னால முடியாதா, அப்போ உன் இஷ்டம்.... அப்பளம் இட்டு எனக்கும் ஒரு கட்டு அனுப்பீடு" என்றபடி ஒரு வித கசப்புடன் சட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
அவள் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள்... இரவெல்லாம் யோசித்து முடிவெடுத்தாள்.
அடுத்த நாள் தந்தை முன் சென்று நின்றாள்.
"அப்பா நான் என் படிப்பை தொடரலாம்னு....." என்றாள்.
"என்னத்துக்கு அதெல்லாம்..... என்றாள் தாய்.
"ஆமா மா" என்றார் தந்தை.
"இல்லைப்பா நான் டிக்ரீ முடிக்கணும்.... மேலே ஐ ஏ எஸ் படிக்கணும் பா" என்றாள் உறுதியாக.
"என்னது கலெக்டர் படிப்பா.... அதுகெல்லாம் எவ்வளோ செலவாகும் எவ்வளோ வருஷமாகும் தெரியுமா?" என்றார் அவர்.
"தெரியும்பா, எனக்கு நல்ல மார்க், நிச்சயமா உதவி பணம் கிடைக்கும்.... என் ஆசிரியர் உதவி பண்ணுவார்.... நான் படிக்கணும்பா.... நீங்க என்ன சொன்னாலும் நான் இதுவரை கேட்டேன், கல்யாணம் முதற்கொண்டு, நான் சொல்றத நீங்க இப்போ கேளுங்கோ என்னை படிக்க விடுங்கோப்பா" என்று மன்றாடினாள்.
அவள் உறுதியாகவே நின்றாள். அடுத்த நாள் கல்லூரியை விட்ட இடத்தில தொடர்ந்தாள்..... விஷ்ணுவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.... எல்லாவிதமாகவும் உதவினார்.... நோட்ஸ், லைப்ரரி புத்தகங்கள், விளக்கங்கள் என டிக்ரீ முடிந்த பின்னும் ஐ ஏ எஸ்கும் உதவினார்.
இதோ இன்று பேப்பரில் தமிழக ஐ ஏ எஸ் முடிவுகளும் போஸ்டிங்கும் வெளியாகி இருக்க,
"பார்த்தியா விசாலம், எம் பொண்ணு கலேக்டர்" என்று பெருமை பேசுகிறார் அதே தந்தை.
அவள் மட்டும் உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். அன்று அவள் வாழ்வின் திருப்புமுனையாக பேராசிரியர் விஷ்ணு வந்து பேசி இருக்காவிடில் சமையல் அறையின் இருட்டு மூலையில் முடிந்து போயிருக்கும் அவளது வாழ்வு.
குறிப்பு: இந்த நூற்றாண்டிலும் இருட்டு மூலையில் அடைந்து கிடக்கும் விதவை பேதைகளுக்கு என் சமர்ப்பணம். அவர்கள் வாழ்வும் விஷ்ணுவைப் போன்ற ஒரு பேராசிரியரால் மலரட்டும்... நன்றி
Show commentsOpen link
No comments:
Post a Comment